காஞ்சீபுரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.

இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம் தேவை இருப்பதால் பணத்தை உடனே கொடுத்தால் தங்கத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விடலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் பணத்துடன் இருவருடன் காரில் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர் இவர்களுடன் இணைந்துள்ளார்.

காஞ்சீபுரத்தில் காரில் சுற்றி வந்து கொண்டிருந்த போது நகைகளை பற்றி மணிகண்டன் கேட்டதால், தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம். எனவே முதலில் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு வந்து பிறகு வாங்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

பின்னர் மாலையில் காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாகக் கூறி காரில் அங்கு இருந்து சென்றனர். சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பைபாஸ் அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து 3 பேரும் மணிகண்டனிடம் உள்ள பணத்தினை பறிக்க முயற்சி செய்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

உடனே காரில் இருந்த 3 பேரும் துப்பாக்கியை காட்டி மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தினை பறித்தனர்.

மேலும்மணிகண்டனை சாலையோரம் தள்ளி விட்டு 3 பேரும் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இது பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here