சென்னை, டிச. 16 –
கொரோனா தொற்றால் தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவிகள் 6 பேர் குடும்பத்திற்கு ரூபாய் 1,60,000 இலட்சம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார்.
சென்னை பெருங்குடியில் புதிதாக துவங்கிய அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
பின்னர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆறுமுகம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் 25 மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்க tab, 50 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை தலா ரூ.2000, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட கொரோனாவால் தந்தையை இழந்த 6 குடும்பங்களுக்கு (1,60,000) ஒரு லட்சத்து அறுபதாயிரம் உதவி தொகை ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
இதேபோல் கொரோனாவால் தந்தையை இழந்த மாணவி ஒருவருக்கு வாழ்நாள் கல்வி செலவை அன்பின் அக்ஷயபாத்திரம் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறக்கட்டளையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் :- தமிழகத்தில் இதுவரை 92.91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 52.05 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது, நைஜீரியாவில் இருந்து வந்திருந்த ஒருவருக்கு மட்டுமே ஓமிக்கிரான் வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 6 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து வருவோர் பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா முகாமில் கட்டாயமாக 7 நாட்கள் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் பெருங்குடி எஸ்.வி.ரவிச்சந்திரன், கிழக்கு பகுதி செயலாளர் மதியழகன், வட்ட செயலாளர் வெங்கடேஷன், ஸ்டாலின்மொழி, மாசிலாமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.