திருவண்ணாமலை ஜூலை.21-
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் இன்று (19.07.2021) கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்;வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் திரு. வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர்
திருமதி. ஆர். சந்திரா, துணை இயக்குநர் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் அலுவலர் உழவர் சந்தை திரு. சி. அரகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு. வே. சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகள் செயல்படவும், விவசாயிகளின் விளைபொருட்கள் நுகர்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைத்திடவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் திருவண்ணாமலை, தாமரை நகர், செங்கம், போளுர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆகிய 8 இடங்களில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் இன்று (19.07.2021) முதல் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் பின்புறம் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் கோவிட்-19 வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி பயன்படுத்தி கைகள் கழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க அறிவுரை வழங்கினார். மேலும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கண்டிப்பாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாண்புமிகு முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் 14.012.1999 ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகராட்சியில் அமைந்துள்ள உழவர் சந்தை தொடங்கி வைக்கப்பட்டது. விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் இடைத்தரகர்களின்றி நுகர்வோருக்கு பசுமையாக விற்பனை செய்ய உழவர் சந்தை ஏற்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை உழவர் சந்தையில் 109 கடைகள் உள்ளன, 125 விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை உழவர் சந்தையில் நாள் ஒன்றுக்கு ரூ.10.00 லட்சம் மதிப்புள்ள 31 மெட்ரிக் டன் காய்கனிகள் வரத்து உள்ளது. இந்த உழவர் சந்தை மூலம் தற்போது 107 விவசாயிகள் மற்றும் 3100 நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள்.
திருவண்ணாமலை உழவர் சந்தையில் மகளிர் சுய உதவி குழுவினர் மலை காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், கூட்டுறவு மளிகை பொருள்கள் விற்பனை நிலையம் மற்றும் கூட்டுறவு மலை காய்கறி விற்பனை நிலையமும் செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை உழவர் சந்தையின் உட்கட்டமைப்பு வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வசதிகள் மேம்படுத்தி நுகர்வோர் வரவை அதிகரிக்க மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய மின் சக்தியால் இயங்கும் மின் உலர்த்தி, கூடுதல் கடைகள் கட்டுதல், ஆகிய பணிகள் ரூ.52.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு, அரசுக்கு திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ரவுண்டானா பகுதியிலிருந்து கட்டிடங்கள் கட்டுமான பணிகளுக்கு கிராமங்களிலிருந்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். இக்கட்டுமான தொழிலாளர்கள் ரவுண்டானா அருகில் தினமும் கும்பலாக கூடுவதால், இரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகில் சமூக இடைவெளி குறியீடு வரையப்பட்டு, அங்கிருந்த அழைத்து செல்ல மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பணிபுரியும் இடத்தில் அரசின் வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரை வழங்கினார். மேலும், கட்டுமான தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சி ரவுண்டானா அருகில் மிதிவண்டி, இரு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் பேருந்துகளில் செல்லும் பொதுமக்களிடம் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தில் கடைபிடிக்கவும், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை வழங்கினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் ரவுண்டானா சிக்னலில் முகக்கவசம் அணியாமல் மிதிவண்டியில் வந்த சிறுமிக்கு அறிவுரை வழங்கி, முகக்கவசம் அளித்தார்.