கும்மிடிப்பூண்டி மே 10
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் எளாவூர் ஊராட்சி தலையாரி பாளையத்தில் சுமார் 100 ஏக்கருக்கும் மேலான நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளது. இதில் சுமார் 50 வருடங்களாக சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக எழுந்த புகார் எழுந்து வந்தது.
அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றி உடனடியாக நீர்நிலைகள் உருவாக்குமாறு கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே கள ஆய்வுக்கு ஆணை பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்று கும்மிடிப்பூண்டி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ரூ. 10 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஏக்கர் நீர்நிலைகளை மீட்டு அவ்விடத்தில் எச்சரிக்கை பலகையையும் வைத்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள் நீர்நிலைகளை மீட்க போராடிய 5 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறு கோரிக்கையும் வைத்தனர்.





















