ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் சட்டசபை தொகுதி தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இருப்பதற்காக மக்களின் தேவைகள் அனைத்தையும் உடனுக்குடன் நிறைவேற்றி தருவதில் தனி கவனம் செலுத்தி வருகிறேன், என, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் கல்வி தந்தை காமராஜர் அறக்கட்டளை கட்டட திறப்பு விழா அறக்கட்டளை தலைவர் அசோகன் தலைமையில் நடந்தது. விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது:
கல்வி கண் திறந்த காமராஜர் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை சிறப்பாக செயல்பட்டு கல்விக்கு நல்ல உதவி புரிய வேண்டும். அம்மா அரசு எப்படி கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி உதவுகிறதோ அதே போல் இந்த அறக்கட்டளையும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரிய வேண்டும்.

இந்திய அளவில் பிரதமர் மோடி ஆட்சி வரவேண்டும் என அனைத்து மாநிலங்களும் முடிவு செய்து ஓட்டளித்தனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் வாக்களிக்கவில்லை. இருப்பினும் நாங்கள் மக்கள் பணி செய்வதில் என்றும் தொய்வடைந்ததில்லை. குறிப்பாக வெளியூர்காரர்களை இங்கு வெற்றி பெற வைப்பது பின் அவர்கள் தொகுதி பக்கமே வராமல் இருப்பதுதான் இங்கு நடக்கிறது. நான் இந்த மண்ணின் மைந்தன் நான் வெற்றி பெற்ற பின் எனது ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை மாநிலத்தில் முன்மாதிரி தொகுதியாக மாற்றும் அளவில் மக்கள் நலத்திட்ட பணிகளை செய்து வந்துள்ளேன். கிராம சாலை 30 கோடி ரூபாய் மதிப்பில் நடந்துள்ளது. மேம்பாலங்கள் நடந்துள்ளன. எனது துறை மூலம் கிராமங்களை இணைக்கும் நவீன இன்டெர்நெட் வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சேவை மட்டுமின்றி நான் வாரந்தோறும் சனி ஞாயிறு கிழமைகளில் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பொது பிரச்சனை என்றாலும் சரி, தனிப்பட்ட பிரச்னை என்றாலும் சரி உடனடியாக தீர்த்து வைத்துள்ளேன். கடந்த 40 ஆண்டுகளில் யாரும் செய்ய முடியாத நிலையில் இருந்த தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு வந்து கோடையை சமாளிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளேன். இந்த கிராமத்திற்கு அருகில் அம்மாபட்டணம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக போராடிய கோரிக்கையை நான் எனது முயற்சியில் நிறைவேற்றி ரூ.17 லட்சம் ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் பணிகள் நடைபெறும். மக்கள் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் செய்த தவறால் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளோம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக மத்திய அமைச்சராகி இருப்பார். ராமநாதபுரம் தொகுதிக்கு பல ஆயிரங்கள் கோடியில் நலத்திட்டங்கள் நடந்திருக்கும். அதில் மருத்துவ கல்லுாரி, ஏர்போர்ட் உள்ளிட்டவைகளும் உடனடியாக வந்திருக்கும். ஆனால் ஜாதி மதம் என பார்த்து தொகுதியை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டனர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் அறக்கட்டளை செயலாளர் முனியராசு வரவேற்றார். செல்லையா கணேசம்மாள் கல்வி வளாகத்தை அறக்கட்டளை துணைத்தலைவர் யோகநாதன் திறந்து வைத்தார். செல்லமுத்து முனியம்மாள் பயிற்சி மையத்தை மலேசியா தொழிலதிபர் முத்துகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பொருளாளர் அசோக் ஆண்டறிக்கை வாசித்தார்.
திரைப்பட இயக்குனர் தண்டபாணி, திரைப்பட நடிகர் நமோநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். வக்கீல் ரஜினி நன்றி கூறினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here