புதுடெல்லி:

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், ஊழல் தடுப்பு குறித்த விதி, எஸ்க்ரோ சிறப்பு வங்கிகணக்கு மூலம் பணத்தை செலுத்துவது உள்ளிட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான விதிகள் குறித்து எதுவும் இல்லை. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக இதுவரை பல உண்மைகள் வெளியாகின. முதலில் 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்கு அரசு முடிவெடுத்தது என்று கூறப்பட்டது. அதையடுத்து, விமானங்களின் விலை விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் பேரம் பேசியது என்று செய்தி வெளியானது.

இந்தநிலையில் பாதுகாப்பு கொள்முதல் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தில் வங்கிக்கான உத்தரவாதம், எஸ்க்ரோ சிறப்பு வங்கிக்கணக்கு என எதுவும் இல்லை. எனினும் பெரிய அளவிலான தொகை முன்பணமாக அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here