திருநாகேஷ்வரம், மார்ச். 21 –
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் நாகநாதசாமி கோவில் உள்ளது. பல்வேறு புராண சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம் பெயரும் ராகு பெயர்ச்சி விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
ராகுபகவான் நாகவல்லி, நாகக்கன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக இந்த தலத்தில் அருள் பாலிக்கிறார். இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 3.13 மணிக்கு ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதனை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி கணபதி பூஜை, யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நேற்று இருகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், பிற்பகல் 2.30 மணிக்கு கடம் புறப்பாடு, மகா அபிஷேகம், சிறப்பு பாலபிஷேகமும், 3.13 மணிக்கு ராகு பகவான் பெயர்ச்சி அடைந்ததும் தீபாராதனையும் நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்க வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வருகிற 23-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. 26-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள், தயிர் பள்ளயம் தீபாராதனை நடக்கிறது. ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் வி.கே.சசிகலா, குற்றவியல் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், தொழிலதிபர் ராயா கோவிந்தராஜ், கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா, கோவில் மேலாளர் ஜெயக்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.