திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுப் போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதோடு தொற்று பரவல் உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கியக் கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று 8ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுது போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணையில் பொதுமக்கள் செல்ல காலவரையின்றி தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் கூடும் கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் தளர்வுகள் ரத்து செய்து கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே இது போன்ற சூழ்நிலை உருவாகாமல் தவிர்க்க பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதிலும் கடைவீதிகள் மற்றும் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.