புதுக்கோட்டை, நவ. 16 –
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் நிலக்கடலை விதை விற்பனையாளர்கள் விதைசட்ட விதிகளின்படி, நல்ல முளைப்புதிறன் உள்ள தரமான விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்திட வேண்டும் என விதை ஆய்வு துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நடப்பு ரபி பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7400 ஹெக்டேர் பரப்பு அளவினை இலக்காக கொண்டு, தொடர்ந்து நிலக்கடலை சாகுபடி விவசாயிகள், தற்போது பெய்துவரும் பருவமழையினை பயன்படுத்தி, நிலத்தினை தயார்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் விவசாயிகள் நல்ல விளைச்சலை பெற்றிட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு சான்று அட்டை பொருத்திய நிலக்கடலை விதைகளை மட்டுமே வழங்கி விதைச்சட்ட விதிகளின்படி, ரசீது வழங்கி, விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும், விதை உரிமத்தில், குறிப்பிட்டு இருக்கும் இடத்தில் மட்டுமே இருப்பு வைத்து நல்ல முளைப்பு திறன் உள்ள தரமான விதைகளை விற்பனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சான்று அட்டை பொருத்தாத குஜராத் மற்றும் பிற மாநில நிலக்கடலை விதைகள், எண்ணெய் தயாரிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். அம்மாதிரி நிலக்கடலைவிதைகள், விதை பயன்பாட்டுக்கு விற்பனை செய்வது விதை சட்டத்தை மீறிய செயலாகும். அதேபோல், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது. அவ்வாறு, விற்பனை செய்வது ஆய்வில் கண்டறியப்பட்டால், விதை விற்பனை தடை மற்றும் விதைச்சட்ட விதிப்படி நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்பட்டுள்ளது.
மேலும், நிலக்கடலை விவசாயிகள், நல்ல விளைச்சலை பெற்றிட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டுமெனவும், விதையின் தோ்வு மட்டுமே விளைச்சலை நிா்ணயிக்கும் எனபதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக நிலக்கடலையில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விதை வேரூன்றி வளர இயலும் என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் முளைக்கும் விதை போதுமான வலுவின்றி முளைத்து தழைக்க இயலாமல் மடிந்து வரும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வயலில் பயிரின் எண்ணிக்கையை சமன் செய்ய இயலாது. எனவே, சீரான பயிா் எண்ணிக்கையைப் பராமரித்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும்.
அவ்வாறு, பராமரித்திட விதையின் தரத்தினை அறிந்து பயிரிட வேண்டும். எனவும், விதை விவர அட்டையில் காணப்படும் பயிரிட உகந்த பருவம், உகந்த மாநிலம் ஆகிய விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும். என்றும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதைகளை வாங்கும் முன்னா் அந்த விதைக் குவியலுக்குரிய முளைப்புத் திறன் பகுப்பாய்வு அறிக்கையினைக் கேட்டு சரிபாா்க்க வேண்டும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விதை விற்பனை செய்ய உரிய ஆவணங்களை சமர்பித்து 5 ஆண்டுகளுக்கு விதை உரிமங்கள் பெறவேண்டும் எனவும் விதை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியில் நேற்றைய தினம் நடைப்பெற்ற (15.11.22) ஆய்வில், விதை சட்ட விதிகளை மீறிய விற்பனை நிலையங்களில் ரூ. 159.68 லட்சம் மதிப்புள்ள 156.95 மெட்ரிக் டன் நிலக்கடலை விதைகளுக்கு விதை விற்பனை தடையினை விதை ஆய்வு அலுவலர்களால் விதை விற்பனை நிலையங்களுக்கு விதிக்கப்பட்டது.
இவ்வாய்வில் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி, விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன் சேவியர் மற்றும் முனியய்யா ஆகியோர் இருந்தனர். விதை விற்பனை உரிமங்கள் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களுக்கான கூட்டத்தில் அனைவரும் விதைசட்ட விதிகளை பின்பற்றி தரமான நிலக்கடலை விதைகளை விற்பனை செய்திடவும், மீறுவோர் மீது விதைச்சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அப்போது அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.