கும்பகோணம், மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
அரசு கொறடா மற்றும் எம்பிக்களை நிகழ்ச்சிக்கு அழைத்து, அவர்களை ஒரு மணி நேரம் காக்க வைத்த பின்னர் நிகழ்ச்சி மாலை ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக கூறி அவர்களை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து இப்படித்தான் அவமானப் படுத்துவீர்களா என ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளிடம் கோபத்தை வெளிப்படுத்தி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் ரயில் நிலையத்திற்கு ஓஎன்ஜிசி சார்பில் இலவச பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்பிக்கள் ராமலிங்கம் மற்றும் கல்யாணசுந்தரம், கும்பகோணம் மேயர் சரவணன் ஆகியோர் அந்நிறுவனத்தால் அழைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் காலை 9.45 மணிக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து அரை மணி நேரமாகியும் நிகழ்ச்சி தொடங்கப் படாமல் இருந்ததால் ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் அரசு கொறடா மற்றும் எம்பிக்களின் உதவியாளர்கள் கேட்டுள்ளனர். அப்போது பேட்டரி கார் திருச்சியில் வந்து கொண்டிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் நிகழ்ச்சியை தொடங்கி விடலாம் என கூறியுள்ளனர்.
பின்னர் 10.20க்கு அரசு கொறடா கோவி செழியன் மற்றும் எம்பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் பேட்டரி கார் மாலைதான் திருச்சியில் இருந்து வருகிறது எனவும், நிகழ்ச்சியை மாலைக்கு ஒத்தி வைத்துள்ளதாகவும் எனவே மாலை 5 மணிக்கு வருமாறும் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு அழைத்து ஒரு மணி நேரம் காக்க வைத்து இப்போது மாலை வாருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம், இப்படித்தான் கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவீற்களா என ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம் அரசு கொறடா மற்றும் எம்பிக்கள் கோபத்தை வெளிப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதனால் கும்பகோணம் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்ந்தது.