மயிலாடுதுறை, மே. 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …

தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.

இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் ஆறு குளம் குட்டை ஏரி ஊரணி வாய்க்கால்கள் என அனைத்தும் தற்போது வறண்டு காணப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் வெப்ப அலை வீசி வருகிறது. அதன் காரணமாக மனிதர்கள் நடமாட்டம் பகல் பொழுதில் குறைந்துள்ள நிலையில், தண்ணீர் தேடி பறவைகள் முதல் ஊர்வன மற்றும் கால்நடைகள் பாலூட்டிகள் என அனைத்து உயிரினங்களும் பல இடங்களில் அலைந்து வருகின்றன.

நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத கொடுமையை விளக்கும் வகையில் மயில் ஒன்று நேற்று குடியிருப்பு பகுதியில் புகுந்து தண்ணீர் கிடைக்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்த அச் சோகச் சம்பவம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் நடைபெற்றுள்ளது.

குத்தாலம் பெரிய செங்குந்தர் தெருவில் உள்ள  ஒளி முகமது என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் வீட்டு நீர் தேக்க தொட்டியின் அருகில் ஏதோ விழும் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து வீட்டு உரிமையாளர் அங்கு சென்று பார்த்த போது மூடப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு அருகே தேசிய பறவை மயில் இறந்து கிடந்துள்ளது.  உடனடியாக அதுக்குறித்து குத்தாலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வந்து பார்த்தபோது மயில் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது மயிலின் உடலை தீயணைப்புத் துறையினர் பையில் போட்டு எடுத்துச் சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here