தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில் அப் பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகளாகவும் மற்றும் கால்நடை வளர்ப்பவர் களாகவும் உள்ள நிலையில் வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் ஆடு மாடுகள் மற்றும் பறவைகள் குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றது.
அதனை உணர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி வெங்கடாஜலம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் ஐந்து இடங்களில் தண்ணீர் தொட்டி அமைத்து ஊரில் உள்ள தண்ணீர் டேங்கில் இருந்து சுத்தமான தண்ணீரை டெம்போ வாகனங்கள் மூலம் எடுத்து வந்து நிரப்பி இன்று முதல் கால்நடை மற்றும் பறவைகள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கான தண்ணீர் பந்தலை அவர் அமைத்துள்ளார்.
அவரின் அச்செயலை அப்பகுதி வாழ் பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஊராட்சி மன்றத் தலைவரைப் பாராட்டி வருகின்றனர். தேவைப்படும் நிலையில் இன்னும் கூடுதலாக பல்வேறு இடங்களில் கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..






















