புல்வாமா தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த 26-ந்தேதி இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. அடுத்தநாள் காலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்கு வந்தன. உடனே இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்றன.
அதில் மிக்-21 என்ற விமானத்தை அபிநந்தன் ஓட்டிச் சென்றார். அவர் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை விரட்டிச் சென்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினார். அந்த விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது. அடுத்த வினாடி அபிநந்தன் ஓட்டிச் சென்ற விமானத்தின் மீது பாகிஸ்தான் ஏவுகணை வீசி தாக்கியது. அதில் அபிநந்தனின் விமானமும் வெடித்து சிதறி கீழே விழுந்தது.
இந்த நேரத்தில் அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். அதேபோல அபிநந்தனால் வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் விமானத்தில் இருந்தும் விமானி பாராசூட்டில் கீழே குதித்தார்.
அபிநந்தனும், பாகிஸ்தான் பைலட்டும் தனித்தனி இடத்தில் பாராசூட்டில் இறங்கினார்கள். அபிநந்தனை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ராணுவம் வந்து அவரை மீட்டது.
அதே நேரத்தில் பாகிஸ்தான் பைலட் விழுந்த இடத்தையும் கிராம மக்கள் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் பாகிஸ்தான் விமானி என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர் இந்திய விமானி என கருதி அவரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த விமானி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
28-ந்தேதி தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 2 விமானிகளை நாங்கள் பிடித்துவிட்டோம். ஒருவரை கைது செய்து வைத்திருக்கிறோம். மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார் என்று பாகிஸ்தான் முதலில் அறிவித்தது.
சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு விமானியை மட்டும்தான் பிடித்துள்ளோம். அவரது பெயர் அபிநந்தன் என்று பாகிஸ்தான் கூறியது.
பாகிஸ்தானின் விமானியையும் இந்திய விமானி என கருதி பாகிஸ்தான் அரசு அவரையும் சேர்த்து 2 பேர் என கூறியது. பின்னர் அவர் பாகிஸ்தான் விமானி என உறுதியானதும் அந்த தகவலை மாற்றி கூறியது இப்போது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு சொந்தமான போர் விமானம் எதுவும் இந்தியாவில் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் விமானம் வீழ்த்தப்பட்டதை இந்தியா உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் அந்த விமானி அடித்து கொல்லப்பட்ட விஷயமும் இப்போது உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த வக்கீல் காலித்உமர் உறுதி செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு கிடந்ததையும், பைலட் தாக்கப்பட்டதையும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அரசு அதில் உடனே தலையிட்டு வலைதளத்தில் இருந்து நீக்கியது. அதே நேரத்தில் நான் அதற்கு முன்பே அந்த வீடியோக்களை பார்த்துவிட்டேன் என்றும் வக்கீல் காலித்உமர் கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் விமானப்படை தரப்பில் இருந்தும் தனக்குள்ள தொடர்பின் மூலமும் பல தகவல் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். அதில் விமானம் வீழ்த்தப்பட்டது, பைலட்டை கிராம மக்களே அடித்து கொன்றது உறுதியாகி இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அந்த பைலட்டின் பெயரையும் அவர் வெளியிட்டுள்ளார். அவரது பெயர் விங் கமாண்டர் ‘ஷாகஸ் உத் தின்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அபிநந்தன் போலவே ஷாகஸ் உத் தினும் விமானப்படை அதிகாரி ஒருவரின் மகன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.