கும்மிடிப்பூண்டி, ஜூன். 23 –
கும்மிடிப்பூண்டியில் உள்ள வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் 8 வது உலக யோகா தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான இயற்கை உணவு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி பஜாரில் செயல்பட்டு வரும் வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பயிற்சி பள்ளி நிறுவனரும் பயிற்சியாளருமான எஸ்.காளத்தீஸ்வரன் தலைமை தாங்கினார்.
யோகா ஆசிரியர்கள் ஜெ.அர்ச்சனா, எஸ். வித்யா, ஆர்.சங்கீதா முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பெரம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் நித்தியானந்தம் பங்கேற்று இந்த நிகழ்வை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆரோக்கியமான வாழ்விற்கான யோகாசனங்களை மாணவர்கள் செய்து காட்டினார்கள். இதனை தொடர்ந்து 50க்கும் பாரம்பரியமான இயற்கை உணவுகளை பெற்றோர்கள் கண்காட்டசியில் வைக்க, அதனை நடுவர் குழு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சிறப்பான முறையில் இயற்கை உணவு தயாரித்த 3 பேருக்கு சிறப்பு பரிசுகளும் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய காளத்தீஸ்வரன், இக்கால கட்டத்தில் குழந்தைகள் துரித உணவுகளையும், நொறுக்குத் தீனிகளையும் அதிகம் விரும்புகின்றனர். இதனால் சிறார்கள் உடற்பருமன் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டு சிரமப்படுகின்றனர்.
அதே நேரம் இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் சிறார்களின் ஆரோக்கியம் காக்கப்படுவதோடு, அவர்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் திகழ்வார்கள் என்றார்.
























