மாங்காடு, மார்ச். 23 –
சென்னை அடுத்த மாங்காடு, கீழ் ரகுநாதபுரம், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் செல்வராஜ் (35), இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி காமாட்சி இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செல்வராஜின் லோடு ஆட்டோவில் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக இவரது நண்பர் வெற்றி (25), என்பவர் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இருவரும் லோடு ஆட்டோ அருகே சென்ற போது பேட்டரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததுள்ளது. உடனடியாக வெற்றி தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்ற நேரத்தில் அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் 4 பேர் செல்வராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சரிந்துள்ளார்.. இந்நிலையில் செல்வராஜை வெட்டிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். வெற்றி அங்கு வந்த பார்த்த போது ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த செல்வராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு பின் செல்வராஜை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செல்வராஜ் உயிரிழந்தார்.
இக்கொலைக் குறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெற்றி மீது சந்தேகம் இருந்ததால் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாகவும், மேலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில் தனது நண்பர்களை ஏவி தான்தான் செல்வராஜை கொலை செய்தேன் என்றவாறு வெற்றி ஒப்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: செல்வராஜின் மனைவி வெற்றியிடம் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வராஜ் கேட்டதாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நண்பர்களை ஏவி செல்வராஜின் ஆட்டோ பேட்டரிக்கு தீ வைத்து விட்டு எரிவதாக கூறி வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்து வெட்டி கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வெற்றி அப்பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சவுண்ட் சர்வீஸ், கொடி அலங்காரம் உள்ளிட்டவற்றை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இந் நிலையில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் மாங்காடு நகர மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாக நின்று தோல்வி அடைந்துள்ள தகவலும் வெளி வந்துள்ளது.
செல்வராஜின் மனைவிக்கும், வெற்றிக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் இந்த நிலையில் தனது கணவரை கொலை செய்யும்படி காமாட்சியே வெற்றியிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளதாக போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் அது தொடர்பாகவும் மாங்காடு போலீசார் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெற்றி மற்றும் காமாட்சியின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.




















