மதுக்கூர், டிச. 07 –

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் வழிகாட்டுதல்படியும் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்க, ஏற்பாடு செய்யப்பட்டு, நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த 30 விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்களின் வயல்களில் ஒரே நேரத்தில் நானோ யூரியா தெளிக்கப்பட்டது.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் யூரியா மேலுரம் இடுவதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையிலும், 46 சதவீத யூரியா திட உரத்தினை பயன்படுத்தும் போது அரசுக்கு ஏற்படும் மானிய இழப்பை தவிர்க்கும் வகையிலும், உற்பத்திச் செலவை குறைத்து உழவர்களின் லாப சதவீதம் உயரும் வகையிலும், தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

46 சதம் தழைச்சத்து கொண்ட யூரியா செய்யும் பணியை 4, சதம் தழைசத்துக் கொண்ட நானோயூரியா செய்கிறது. விவசாயிகள் பொதுவாக பரிந்துரைப்படி ஏக்கருக்கு இட வேண்டியது   22 கிலோ என்ற போதிலும் நிலவும் பருவ சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா வரை செலவு செய்கின்றனர். மேலும், தெளிப்பதற்கான செலவினமாக தனியாக ரூபாய் 300 செலவு செய்கிறார்கள்.

ஆனால் நானோ யூரியா பயன்படுத்தும் பட்சத்தில் ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் நானோ யூரியா போதுமானதாகயிருக்கிறது. மேலும் இதன் விலை ரூபாய் 230 மட்டுமே, இதனை 20 லிட்டர் நீரில் கலந்து ஒரு மா வயலுக்கு ஏழு டேங்க்கும், ஒரு ஏக்கர் வயலுக்கு 21 டேங்க் வரை தெளிக்கலாம். .

நானோ யூரியா, யூரியா போல வீணாக கரைவதும் இல்லை ஆவி ஆவதும் இல்லை நிலத்தடி நீருடன் கலந்து வீணாவதுமில்லை, ஆனால்  நானோ யூரியா பயன்படுத்தும் போது, பயிர் எவ்வித சேதம் இன்றி இலைவழி உரமாக நேரடியாக பயிரினால் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கைத்தெளிப்பான் மற்றும் பவர் தெளிப்பான்கள் மூலம் தெளிப்பதை விட ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் சாகுபடி மேற்கொண்டு ஒரே நேரத்தில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பதால் நீரின் தேவையும் குறைகிறது, தெளிப்பதற்கான செலவும் குறைகிறது.

எடுத்துக்காட்டாக நேற்றைய தினம் விவசாயிகள் நெம்மேலி கிராமத்தில் ஒருங்கிணைந்து இரண்டு ட்ரோன்களின் உதவியுடன் ஒரே நேரத்தில் 30 ஏக்கரில் நானோ யூரியா தெளிப்பு பணி மேற்கொண்டனர். ஒரு ஏக்கர் வயலில் அது பத்து நிமிடத்தில் தெளித்து முடித்து விடுகிறது.

ஈச்சங்கோட்டை வேளாண் அறிவியல் கல்லூரியின் ஒத்துழைப்புடன் நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடனும் நேற்றைய பணிகள் சிறப்பாக நடைப்பெற்றது.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி, கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து நானோ யூரியா தெளித்தலின் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.

நெம்மேலி கிராம முன்னோடி விவசாயிகள் பெரமையன் சேதுராமன் இருளப்பன் மற்றும் விவசாய ஆர்வலர் குழு உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டு இது போன்ற திட்டங்கள் தங்களுக்கு மிக உதவியாக இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இதனால் தங்களுக்கு தெளிப்பு செலவுக் குறைவதோடு, உற்பத்தி செலவும் குறைவதால் இத்திட்டம் சிறப்பானதென அவர்கள் தெரிவித்தனர். மேலும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் தெளிப்பதற்கும் இதுப்போன்ற உதவிகள் கிடைத்தால் மிகச் சிறப்பாகயிருக்கும் எனவும் தெரிவித்தார்கள்.

ட்ரோன் மூலம் தெளிப்பதால் ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் நீர் போதுமானது. அரசு நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி திட்டத்தில் இலைவழி உரம் தெளிப்பதற்கு இத்தகைய ஏற்பாடுகள் செய்தால் கூடுதல் பலன் அளிக்கும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி தொழில்நுட்ப உதவியாளர் அருள் தாஸ் நன்றி கூறினார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here