சென்னை, ஜன. 5 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 504 ஆக்ஸிஜன் படுக்கைகள், 400 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதனை, தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (4.1.2022) சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாக சென்று ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here