சென்னை, செப்டம்பர். 14 –
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் நாகராஜன். அவர் நடத்தி வரும் கடைக்கு இரண்டு ஷட்டர் கதவுகள் உள்ளது அக்கடையின் இரு பக்க பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையன் நடுப் பகுதியில் உள்ள உள் புற பூட்டை உடைக்க முடியாமல் தப்பிச் சென்றுள்ளான்.
எந் நேரமும் ஆள் நடமாட்டம் நிறைந்த இப்பகுயில் கடந்த சில தினங்களாக இது போன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று அதிகாலை 2.45 மணி அளவில் நடந்த இச் சம்பவம் சிசிடிவி கேமரா பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக அந்த கடை உரிமையாளர் தான் அங்கம் வகிக்கும் வணிகர் சங்கம் மூலமாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி அந்த தெரு மற்றும் தெரு சந்திப்புகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததின் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொள்ளை முயற்சியில் கொள்ளையன் தனியாக ஈடுபட்டனா அல்லது கூட்டாளிகளுடன் வந்தானா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.
இதே காரணீஸ்வரர் கோவில் தெருவில் அண்மையில் அடுத்தடுத்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும், ஒரு லேப் டாப்பும் திருடு போனது குறிப்பிடத்தக்கது. ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பும் நடந்துள்ளது. தொடரும் கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி கொள்ளையனை தேடி வருகின்றனர்.