அகமதாபாத்:
பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ‘லக்ஷ்ய ஜித்தோ’ எனும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது:
ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது 2 மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதலில், இந்திய வீரர்கள் 40 பேர் இன்னுயிர் நீத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் தைரியமாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் எவ்வித பதிலடி தாக்குதல்களும் கொடுக்க இயலாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். தற்போது என்ன நடந்தது? பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசில், புல்வாமா தாக்குதல் நடந்து 13 நாட்களில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதில் இந்திய தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்