திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி ரயில் பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் செய்தனர்.
கும்பகோணம், அக். 13 –
திருச்சி -தஞ்சாவூர்- மயிலாடுதுறை- சென்னை வழித்தடத்தில் முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த பொழுது அனைத்து பயணிகள் ரயில்களும் ,சில விரைவு ரயில்களும் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றன.
ஆனால் தற்போது, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதும் முன்பு இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்டது.
இதனால் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
மேலும் விரைவு ரயில்கள் எதுவும் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை என்றும் .இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று போராடத்தில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் திருச்சியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயிலும், மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயிலும் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை திருவிடைமருதூரை சேர்ந்த 100 -க்கும் மேற்பட்டோர் திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி செல்லும் விரைவு ரயில் சென்றதும் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நவம்பர் மாதத்திலிருந்து திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் ரயிலில் நிற்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.