பட்டுக்கோட்டை, மார்ச். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு

பெண் சர்வேயர், பெண் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பணி செய்யவிடாமல் தடுத்து  அவர்களை கடுமையாக தாக்கியவர்களை  கைது செய்ய வலியுறுத்தி   நூற்றுக்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் பேரணியாக சென்று டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு சூழ்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் பெரியகோட்டை சரக நில அளவையராக பணிபுரிந்து வருபவர் பவ்யா (24). அதுபோல் பெரியகோட்டை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் மாரியம்மாள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் பெரியகோட்டையில் நில அளவை செய்யும் போது அதே கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் உள்ளிட்டோர் கொண்ட ஒரு கும்பல் அப்பெண் அரசு ஊழியர்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து  கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதில் பலத்த காயமடைந்த  நில அளவையர் பவ்யா பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் அச்சம்பவம் குறித்து பவ்யா மதுக்கூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, முருகானந்தம் உள்ளிட்ட அக்கும்பலை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகானந்தம் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி பட்டுக்கோட்டை தாலுக்காவில் பணிபுரியும் சரக நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பெண் அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர்  பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலக வளாகத்தில் இரு தினங்களாக காத்திருப்பு போராட்டத்தில்   ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாததைக் கண்டித்து, பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இருந்து பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பேரணியாக வந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அவர்களிடத்தில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். திடீரென டிஎஸ்பி அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் டி எஸ் பி அலுவலகம் அருகிலேயே பேருந்து நிலையமும் இருந்து வரும் நிலையில் அங்கு பெருத்த அளவில் பரபரப்பு சூழ்ந்திருந்ததை காண முடிந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here