திருவண்ணாமலை ஜன.8-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் நடந்தது.
இதில் தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது கோவில் உண்டியலில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 89ஆயிரத்து 35 மற்றும் 363 கிராம் தங்கம், 1109 கிராம் வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கை தொகையை கோவில் கணக்கில் வங்கியில் செலுத்தினர்.
கடந்த 2 மாதங்களாக தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தது எனவே கடந்த மாதத்துக்கான உண்டியல் காணிக்கை வெகுவாக அதிகரித்தது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச உண்டியல் காணிக்கையாக டிசம்பர் மாதத்துக்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.





















