குடவாசல், செப். 09 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள நாளங்கட்டளை கிராமத்தில் உள்ள அருள்மிகு வட பத்திர காளியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திருக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு. அதில் நான்கு கால யாக பூஜைகள் சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கஜமுகன் முன்னே வர புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்து பின்னர் விமான கோபுர கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்வைக் காண 5000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டினை கிராமமக்கள் மற்றும் மருளாளிகள் இளைஞர் மன்றத்தினர் என அனைவரும் இணைந்து மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.






















