திருவண்ணாமலை, மார்ச் . 8 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940 பயனாளிகளுக்கு ரூ.16.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த இந்த அரசு விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருவண்ணாமலை தொகுதியில் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 550 பயனாளிகளுக்கு ஆணைகள் மற்றும் மொத்தம் 940 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைஅமைச்சர் எ.வ.வேலு வழங்கி பேசினார்.
மக்கள் நலனுக்கான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார். மகளிர் குழு கடன் ரத்து இலவச பேருந்து பயணம் என பெண்களின் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இளைஞர்கள் அதிகம் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் முதல்வர் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து வருகிறார். தொழில் நிறுவனங்களுக்கு அரசின் சலுகைகளை வழங்கி அதன் மூலம் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், அதன்படி கோவையில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சமூகம் முன்னேற்ற வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம். தமிழகத்தில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பது அவரது இலக்கு. கடந்த 1971ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற கலைஞர் குடிசையில் கூரையை கூட மாற்ற முடியாத ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித்தரும் உன்னதமான திட்டத்தை கொண்டுவந்தார்.
இந்தியாவில் வேறு எந்த முதல்வருக்கும் தோன்றாத இந்த திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது. இந்த திட்டம்தான் இந்திரா குடியிருப்பு திட்டமாக பின்னர் மாறியது. தற்போது பிரதம மந்திரி வீடுவழங்கும் திட்டமாக செயல்படுகிறது. மீண்டும் 2006ம் ஆண்டு 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
கடந்த 2009ல் நடந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில் 21 லட்சம் குடிசைகள் இருந்தன. கிராமங்கள் அதிகம் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1.85 லட்சம் குடிசைகள் இருந்தன. அதில் 1 லட்சம் பேருக்கு அப்போது வீடுகள் கட்டித்தரப்பட்டன. மீதமுள்ள 85 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டும் ஆணைகள் வழங்கப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் அதை தொடர்ந்து செய்ய முடியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பியும் எந்த திட்டத்தையும் கொண்டு வரமுடியாத நிலை இருந்தது.
தற்போது 85 ஆயிரம் குழுமங்களில் இடம் பெயர்ந்தோர் மற்றும் சொந்தமாக வீடு கட்டியவர்கள் போக 18 ஆயிரம் பேர் குடிசை வீடுகளில் உள்ளனர். எனவே அவர்களுக்கு தற்போது வீடுகட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படுகிறது. குடிசையில் இருப்போர் கணக்கெடுப்பு தொடர்ந்து நடக்கிறது. அவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும் என்றார்.
விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம் திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்திவேல்மாறன் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இல.சரவணன் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சி.பார்த்திபன் மேற்பார்வையாளர் அருண்குமார் வடக்கு மாவட்ட பொருப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நகர செயலாளர் ப. கார்த்திவேல்மாறன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஏ.எஸ்.லட்சுமி நன்றி கூறினார்.