கும்பகோணம், டிச. 17 –
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் இன்று மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் என் ஓ சுகபுத்ரா தலைமையிலும், அரசு தலைமை கொறடா கோவி செழியன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிகழ்வில், கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை க . அன்பழகன், கும்பகோணம் கோட்hட்சியர் லதா, நகராட்சி ஆணையர் (பொ) மணி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ். கல்யாணசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமாக, கோரிக்கை மனுக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வழங்க இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையில், தரையிலேயே நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து காத்திருந்தனர். இருப்பினும், கூட்ட நெரிசல் மற்றும் தொடர் நிகழ்ச்சிகள், நேரமின்மை காரணமாக, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேடையில் இருபுறமும் அமர வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என சுமார் நூறு பேரிடம் மட்டும் நேரடியாக மனுக்களை பெற்றார். பிற மனுக்களை அரசுத்துறை அலுவலர்களும், எம்எல்ஏவும், முன்னாள் நகர்மன்ற தலைவரும், அமைச்சர் சார்பில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். நிகழ்ச்சிக்கிடையே கூட்ட மேடையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்த சம்பவம் துர்திஷ்டவசமானது. இதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்ததும், மூன்று மாணவர்கள் படுகாயமுற்றதும் அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்மட்ட அலுவலர்களை கொண்ட குழு அமைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மட்டுமல்லாது அனைத்து அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளிலும் உள்ள பழைய கட்டிடங்கள் உள்ள பகுதிகளுக்கு மாணவர்களை அனுப்பக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் பள்ளிக்கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய பள்ளிகல்வித்துறை சார்பில் உத்தரவிட்டு இருப்பதாகவும், இனி இத்தகைய துயர சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காமல் தடுக்கப்படும் என்றும், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமுற்ற மாணவர்களின் குடும்பத்தினருக்காண நிவாரணம் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்றும் கூறினார்.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தமுள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில், இதுவரை மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்ற ஆறு தொகுதிகளிலும் 35 ஆயிரத்தி 630 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.என்றும், இதில் பெரும்பாலானவை வேலைவாய்ப்பு கேட்டும், வீட்டு மனை பட்டா கேட்டும் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதற்கு அடுத்ததாக அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி, கேட்டும் மனுக்கள் அதிக அளவில் வந்துள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதே கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட பம்பப்படையூரில் நடைபெறும் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாமில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இன்று பிற்பகல், திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட நாச்சியார்கோயில், திருவிடைமருதூர், பந்தநல்லூர் மற்றும் திருப்பனந்தாள் ஆகிய இடங்களிலும் நடைபெறும் மக்களை தேடி முதல்வர் நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்.என்பது குறிப்பிடதக்கது.