ராமநாதபுரம்:
தமிழகத்தில் வறுமைகோட்டின் கீழ் உள்ள பயனாளிகள் ஒரு கோடி பேருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளோம். ஏழை எளியவர்களுக்கு கொடுப்பதில் பெருமைதான். இதை எதிர்கட்சியினர் வேண்டுமென்றே தடுக்கப்பார்க்கின்றனர் என, அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆவேசமாக பேசினார்.
ராமநாதபுரத்தில் அரண்மனை முன்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் கட்சி சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:
தமிழகத்தில் 39 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிகணிணி வழங்கிய ஒப்பற்ற அரசு தமிழக அரசு. அதிமுக அரசு ஏழை எளியவர்களுக்கான அரசு. தற்போது லோக்சபா தேர்தலுக்கு அமைந்துள்ள கூட்டணி இயற்கை கூட்டணி… அதாவது, இலை, தாமரை, மாம்பழம் என இயற்கையான கூட்டணி. இயற்கை கூட்டணியை கண்டு எதிரிகள் திக்குமுக்காடுகின்றனர்.
எங்கள் கூட்டணியில் தேமுதிக, வும் வர உள்ளது. அதுதவிர தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் என பல கட்சிகள் சேர உள்ள நிலையில் எதிர்கட்சியினர் எட்டி பார்க்கும் துாரத்தில் எதிரிகள் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டனர். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தற்போதே தோல்வி பயம் அதிகரித்து விட்டது. ஸ்டாலின், டி.டி.வி ஆகியோருக்கு முதல்வர் கனவு அதிகமாக உள்ளது. இந்த கனவு நிறை வேறாது. 2014ல் ஸ்டாலின் கட்சி முட்டை வாங்கியது. தற்போதும் அவர்களது கட்சி வெற்றிபெற வாய்ப்பில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் புரோட்டா கடையில் வாங்கும் புரோட்டாவிற்கு கூட பணம் தரமாட்டார்கள். அராஜக ஆட்சி நடத்துவார்கள். பெண்களை இழிவு படுத்துவது அதிகரிக்கும். எனவே மக்கள் திமுகவை விரும்பவில்லை. ஆனால் மன்னாரன் கம்பெனி நடத்தும் ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார்.
திமுகவை ஒழிக்க வைகோ ஒருவர் போதும். ஒன்றரை லட்சம் தமிழர்களை சுட்டுக்கொன்ற காங்கிரஸ், திமுக கூட்டணியில் எப்படி வைகோ உள்ளார். நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், இந்த ஊழல் மிக்கவர்கள் மீண்டும் கூட்டணி. தமிழர்களை கொன்று குவித்த கட்சியுடன் கூட்டணி . தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு என்றால் தக்காளி சட்னி என்ற கோட்பாட்டில் உள்ள கட்சிதான் திமுக. தமிழகத்தில் உள்ள மக்களுக்கு எந்த நன்மை செய்தாலும் அதை தடுக்க மறுநாளே கோர்ட்டுக்கே செல்லும் கட்சி திமுக.
பொங்கல் தினத்தில் பொங்கல் பரிசு கொடுக்க விடாமல் தடுக்க முயன்றவர்கள்.தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்தது. இதில் முதல்கட்டமாக 60 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதை உயர்த்தி ஒரு கோடி குடும்பத்தினருக்கு கிடைக்கும் வகையில் உயர்த்தி உள்ளோம். ஆனால் இத்திட்டத்தையும் தடுக்க திமுக முயற்சிக்கிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறுவதை பொறுக்க முடியாதவர்கள் திமுகவினர். ஆனால் இந்த அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் தயாரித்து அனைவருக்கும் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தமிழ்மகன்உசேன், நகர் பொருளாளர் ஜெயக்குமார், ஆவின் தலைவர் நாகநாதசேதுபதி, முன்னாள் கவுன்சிலர்கள் வாசுகி, ஆரிப்ராஜா, வீரபாண்டியன், வரதன், நாகஜோதி உட்பட பலர் பங்கேற்றனர்.