கும்பகோணம், மார்ச். 31 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் முதற் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் எதிர் வரும் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அந்த வகையில் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ம.க ஸ்டாலின், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர், கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
மேலும் அப் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாம்பழச் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேட்பாளர் ம.க.ஸ்டாலின் கூறியதாவது: பந்தநல்லூர் ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும், திருப்பனந்தாள் ஒன்றியத்தை தனி தாலுகாவாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மயிலாடுதுறை நவகிரக ஸ்தலங்களின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு குறைகள் இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வார் எனவும், மேலும் பிரதமர் மோடி 3 வது முறையாக மீண்டும் அரியணை ஏறச் செய்ய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.