மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தலைமைச் செயலாளர் அறிவிப்பை முதல் வாரமே காற்றில் பறக்க விட்ட மயிலாடுதுறை மாவட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி வைத்ததால் கடுப்பான கலெக்டர், தகுந்த காரணம் சொல்லாத உதவியாளர்களை குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளியேற சொன்னதால் பரபரப்பு நிலவியது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவது வழக்கம் வழக்கமாக மாதத்தின் முதல் திங்கள்கிழமை அன்று வருவாய்த்துறை காவல்துறை பொதுப்பணித்துறை மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்று மாவட்ட ஆட்சியரின் பரிந்துரைகளை ஏற்று பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது உரிய உத்தரவுகள் பிறப்பிப்பது வழக்கம்.
கடந்த வாரம் தலைமைச் செயலர் அறிக்கைப்படி ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதற்கான அவ்வறிவிப்பினை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு துறைக்கும் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் வழக்கம் போல் பங்கேற்காமல் தலைமைச் செயலரின் உத்தரவை காற்றில் பறக்க விட்டனர்.
கூட்டத்தை 11:00 மணிக்கு துவக்கிய மாவட்ட ஆட்சியர் மாவட்ட அதிகாரிகள் பல பேர் ஆப்சன்ட் ஆனது குறித்து மைக்கில் கேட்டார். மாவட்ட அளவிலான அதிகாரிகள் வராமல் உதவியாளர்களை அனுப்பி இருந்ததால் அவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று உடனடியாக உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகள் பலர் பின்பக்க வழியாக வெளியேறினர். ஒரு சிலர் மட்டும் மாவட்ட அதிகாரிகள் வராத காரணத்தை மாவட்ட ஆட்சியருக்கு விளக்கி கூட்டத்தில் பங்கேற்றனர்.
தீயணைப்பு துறை சார்பில் அடுத்த அதிகாரி என்று பங்கேற்றவரை நீங்கள் அடுத்த அதிகாரி கிடையாது என்று கண்டிப்புடன் கூறி உண்மையை வரவழைத்தார். பொதுப்பணித்துறை பள்ளி கல்வி துறை, மின்வாரியத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்ததுடன் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அலுவலகத்தின் வாசலுக்கு வந்து மனுக்களை பெற்று சென்றார்.