செங்கல்பட்டு, ஜூலை. 02 –
பாலியல் வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் ஆக்கிரமித்திருந்த சுமார் 50 கோடி மதிப்பிலான 7.5 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்து முடித்த பள்ளி மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கேளம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லாததால் அரசு நிலங்கள் (பொறம்போக்கு இடம்) எங்கெல்லாம் உள்ளது என்று கேளம்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் வரைப்படத்தை பார்த்தபோது சிவசங்கர் பாபுவிற்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் அரசு நிலம் சுமார் 50 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட சுமார் 35 போலீசார் பாதுகாப்புடன் 2 ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு இடத்தை மீட்டெடுத்தனர். அப்பொழுது சிவசங்கர் பாபா ஆதரவாளர்கள் குறை ஒன்றும் இல்லை என்ற பாடலை குழுவாக பாடி வருகின்றனர்.























