கும்மிடிப்பூண்டி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
திருக்குறளில் இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் திலகவதி பாஸ்கர் (36). தற்காலிக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் சிறு வயதிலேயே தந்தை டில்லி உடல்நலம் பாதிக்கப்படவே வறுமையின் உச்சத்தில் தாய் சுலோச்சனா (52) வீடு வீடாகச் சென்று பழம் விற்பனை செய்து படிக்க வைத்துள்ளார்.
வறுமை நிலைமையை உணர்ந்த கவிஞர் திலகவதி பாஸ்கர் தமிழின் மீது கொண்ட அதீத பற்றால் பள்ளி பருவத்திலேயே பல்வேறு கவிதைகள் எழுதிப் பரிசுகளைப் பெற்றுள்ளார். தொடர்ந்து கல்லூரி பருவத்தில் பல சிந்தனைமிகு புத்தகங்களில் எழுதி எழுத்தாளராய் உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன் 1330 பட்டாணியில் 1330 திருக்குறளை எழுதி அரிய சாதனையை நிகழ்த்தினார். இவரது சாதனையை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையாக அங்கீகரித்தது. இந்தச் சாதனை பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் மீண்டும் திருக்குறளை ஐநா மற்றும் யுனெஸ்கோ புனித நூலாக அறிவிக்க வலியுறுத்தி தற்போது 751 சிறிய வண்ணக் கற்களில் 1330 திருக்குறளை 9 மணி நேரம் 20 நிமிடங்களில் எழுதிப் புதிய சாதனைப் படைத்துள்ளார்.
இவரது சாதனை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், செ.வெ வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது. இது மட்டுமின்றி சாதனை பெண்மணி விருது, பைந்தமிழ் மாமணி விருது, ஆசுகவி விருது, பாரதியார் விருது, ஐந்திணை பாவலர் விருது, திருக்குறள் ஆய்வுச் சுடர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், பெற்ற பதக்கங்களையும், சான்றிதழ்களையும், கேடயங்களையும், விருதுகளையும் வைக்கக் கூட இடமில்லாமல் ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்து வருகிறார். இவரின் ஏழ்மை நிலையைப் போக்க தமிழக அரசு நிரந்தர வேலை வழங்க கோரிக்கை வைத்துள்ளார். ஏழ்மையிலும் தமிழ் மொழிக்கு உயிர் கொடுத்து வரும் இவருக்கு தமிழக அரசு கைகொடுக்குமா என காத்திருந்து பார்ப்போம்.
பல்வேறு உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் கடந்த 2023 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் திலகவதி பாஸ்கர் என்ற தலைப்பில் 2023 வரிகளில் கவிதை எழுதி சாதனை படைத்து ஆல் இந்திய புக் ஆஃப் ரெகார்ட், ரெக்கார்ட்ஸ்,சேவே வேர்ல்ட் ரெகார்ட் ஆகிய உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.
இவர் 50 தலைப்புகளில் 50 கவிதை, 500-க்கும் மேற்பட்ட கவிதை, 10- க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்கள் என பல்வேறு சாதனை படைப்புகளை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குடும்ப கஷ்டத்தில் வாழும் இவருக்கு தமிழ் மீது தீராத காதல். விருதுகளை தனது வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல் பீரோக்களில் வைத்துள்ளார் தமிழக அரசு உதவிக்கரம் நீட்டி அவர் மென்மேலும் சாதிக்க ஊக்கப்படுத்தும் விதமாக ஆவண செய்ய வேண்டும்