மீஞ்சூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.
இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் அக்னி குண்டம் அமைத்து கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக கால பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து புதிய சிலைகள் பிரதிஷ்டை, கண் திறத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதனையடுத்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி நடத்தப்பட்டு பல நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்களின் மீது ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, என்ற கோஷங்களை எழுப்பியவாரு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் ஐயா வி.ஆர்.பகவான், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ பலராமன், மருத்துவர் விஜயராவ், விழா குழு தலைவர் ரோசையா, ஒன்றிய பெருந்தலைவர் ரவி, பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், திமுக நகர செயலாளர் தமிழ்உதயன்,அதிமுக நகர செயலாளர் பட்டாபிராமன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர், அதிமுக நகர துணை செயலாளர் எம்.வி.தமிழரசன், இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சோமுராஜ சேகர், மற்றும் வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள், உள்ளிட்ட திரளான அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.