கும்பகோணம், ஜூலை. 07 –

கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.

மேலும் இவ்விழாவில், ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேலும் இவ்விழா சிறப்புடன் நடைப்பெற இறைப்பணி நல்கினார்கள்.

திருப்பனந்தாளில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபெரிய நாயகி அம்பாள் சமேத அருணஜடேஸ்வர சுவாமி திருக்கோயில் திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடையதாகும்.

மேலும் பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோயிலில் 1968-ம், ஆண்டு மற்றும் 2003-ம் ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு  நிகழாண்டு ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய பாலாலயத் திருப்பணி கடந்த 6 மாதங்களில் 2 ராஜகோபுரங்கள் மற்றும் 10 விமானங்களில் தங்க முலாம் பூசிய 50 செப்பு கலசங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் ரூ.3 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் 15 ஆயிரம் சதுரடி பரப்பளவில் யாகசாலை அமைக்கப்பட்டு, அதில் 59-யாக குண்டங்களும், 25 வேதிகைகள் அமைக்கப்பட்டு, 80 சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். இந்நிலையில் யாகசாலை 3ஆம் தேதி காலை மண்ணியாற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்க்ரஹணம், சம்ஹிதா ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜைகளுடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. இன்று  8 கால யாக பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது

பின்னர், கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்து ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தருமபுரம் ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமட அதிபர் எஜமான் சுவாமிகள், சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், செங்கோல் ஆதீனம், மதுரை ஆதீனம், கூனம்பட்டி ஆதீனம், நெல்லை உமையுருபாக ஆதீனம் உள்ளிட்ட பல ஆதீனங்கள் பங்கேற்று இவ்விழா மேலும் சிறப்படையுமாறு இறைப்பணிகள் ஆற்றினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here