கும்பகோணம், டிச. 08 –
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கொற்கை ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ காலவைரவர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொற்கை ஊராட்சியில் மிகப்பெரிய நாகமரம் அமைந்துள்ளது. அதன் கீழே வீற்றிருக்கும் ஸ்ரீ அபிராமி அம்பாள் உடனுறை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஆலயத்தில் நவகிரகங்கள், சனி, சூரியன், விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ காலபைரவர் ஆலயத்தில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று 07 ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இன்று 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களிலிருந்த விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ அபிராமி மடம் அன்னதான குழு தலைவர் சிவ தனபால், மற்றும் கிராம வாசிகள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் இளைஞர்கள் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.