திருவாரூர், மார்ச். 27 –
திருவாரூர் அருகேவுள்ள பழையவலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சிவன் கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்க பெருமாள் ஆகிய இரு திருக்கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழையவலம் கிராமத்தில் அமைந்துள்ளது, அருள்மிகு ஸ்ரீ சத்யாயதாட்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி சிவன் கோயில், மேலும் இத்திருக்கோயிலின் அருகிலேயே அருள்மிகு ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயிலும் உள்ளது.
மேலும் இவ்விரண்டு திருக்கோயில்களும், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்விரு திருக்கோயில்களும் மிகப் பழமையானதென்பதால் சிதலமடைந்திருந்த நிலையில் உபயதாரர்கள் குபேந்திரன், சபிதா, வித்யாசிவராமன், பத்மநாபன், கணேசன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர்களால் இத்திருக்கோயில்களின் திருப்பணி வேலைகள் பெருத்த பொருட்செலவில் அகஸ்தீஸ்வரர் கோயில் கர்ப கிரஹம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், அலங்கார மண்டபம், பரிவார சன்னதிகள், முகப்பு வாயில் மற்றும் மதில் சுவர் உள்ளிட்ட அனைத்தும் சீரமைக்கப்பட்டது.
அதுபோல் கரியமாணிக்க பெருமாள் கோயிலும் திருப்பணிகள் நடைப்பெற்று முடிவுற்ற நிலையில், இவ்விரு திருக்கோயில்களிலும் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 24 ந் தேதி மாலை முதல் யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டு நேற்று காலை வரையில் தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து, கடங்கள் புறப்பாடு நடைபெற்று நேற்று காலை 9.30 மணி அளவில் ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகமும், அதன் பின்னர் காலை 10 மணி அளவில் அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
மேலும் ஆலய அர்ச்சகர்கள் லட்சுமிநாராயணன் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் விமானம், மூலவர் உள்ளிட்ட அனைத்து கலசங்களுக்கும் சிவாச்சாரங்கள் மூலம் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷமானது நடைபெற்றது.
மேலும் இவ்விழாவினைக் காண சுற்றுவட்டாரம் மற்றும் உள்ளூர்வாசிகள் என திரளான பக்தர்கள் வருகைத் தந்து கோபுரம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயிலின் செயல் அலுவலர் அசோக்குமார், ஆய்வாளர் ராஜ்திலக், அலுவலர் சிவபுண்ணியம் மற்றும் கிராமமக்கள் என அனைவரும் இணைந்து வெகு சிறப்பாக செய்திருந்தனர்.