வேப்பத்தூர், மார்ச். 18 –
கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக தலைமை அறிவித்தபடி வழங்காத திமுக நிர்வாகிகளை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் அடுத்துள்ள திருவிடைமருதூர் அருகேவுள்ள வேப்பத்தூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணி சார்பில் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கு திமுக உறுப்பினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திமுக தலைமை அறிவித்தபடி துணைத் தலைவர் பதவியை தங்களுக்கு வழங்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று கல்யாணபுரத்தில் இருந்து பேரணியாக வேப்பத்தூர் பேரூராட்சி நோக்கி செல்ல திட்டமிட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெண்மணி தலைமையில் திமுக நிர்வாகிகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரணி செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.