ராசிபுரம், ஏப். 23 –

ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின் வெட்டு பிரச்சனையில் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறது திமுக அரசு எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு பிரச்சனையில் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கிறது திமுக அரசு என தமிழக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி குற்றம் சாட்டினார்.

ராசிபுரம் நகர அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமையான இன்று நடைபெற்றது. ராசிபுரம் புதிய பஸ் நிலையம் முன்பாக நடைபெற்ற நிகழ்வில், முன்னதாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாமக்கல் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர், நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு மத்திய அரசு நிலக்கரி குறைவாக வழங்குவதாக தவறான தகவலை சொல்லிக் கொண்டுள்ளது. எப்போதும், மத்திய தொகுப்பில் இருந்து எப்போதும் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் டன் வரை தான் நிலக்கரி கொடுத்து கொண்டுள்ளது.

தொடர்ந்து தெரிவிக்கையில் மத்திய அரசு தேவையான அளவு முழுவதும் எப்போதும் எந்த மாநிலத்துக்கும் கொடுத்தது இல்லை. அதிமுக ஆட்சியில் இதை வைத்துதான் மின்வெட்டு இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது கோடை காலம் வரும் என தெரிந்தும் நிலக்கரி கையிருப்பு வைக்காமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு என கூட அமைச்சர் கூறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் எப்போதும் மின்வெட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றார்.

மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பதிலளிக்கையில் கடந்த 16 ஆண்டுகால ஆட்சியில் மின்துறையில் தவறு நடந்ததுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது தவறு எனவும், கடந்த 5 ஆண்டுகள்தான் நான் மின்துறை அமைச்சராக இருந்தேன். அதில் அப்படி தவறு நடந்திருந்தால் அவர்கள் வசம் தான் சிபிஐ உள்ளது. அதனை வைத்து விசாரணை நடத்தட்டும், நான் சந்திக்க தயாராகவுள்ளேன் என்றார். இதில் ராசிபுரம் நகர அதிமுக செயலர் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here