கும்பகோணம், டிச. 19 –
கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்று மகிழ்ந்தனர்.
இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற கிழக்கு மண்டல அளவிலான சிலம்ப போட்டி கிழக்கு மத்திய மண்டல தலைவர் ராஜமணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிலம்பாட்டம், இரட்டைக்கம்பு, வாள் வீச்சு, வேல் கம்பு, சுருள் வாள், கஜா ஆயுதம் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், மற்றும் புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த 3 வயது முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு அவர்கள் வயதிற்கு ஏற்ப தனித்தனி குழுக்களாக பிரித்து நடைபெற்ற போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று, தற்காப்பு கலையான சிலம்பத்தில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தினர்.
போட்டிகளின் நடுவர்களாக சென்னை கார்த்திகேயன், திருச்சி கணநாதன் தலைமையிலான 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தகுதியானவர்களை தேர்வு செய்தனர். இப்படி ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற, மாணவ மாணவியர்களுக்கும் சங்கத்தின் நிறுவனத்தலைவர் முனைவர் சுதாகரன் தனித்தனியாக நினைவு பரிசுகளும், சான்றிதழ்களும், குழுவில் சிறப்பிடம் பெறும் குழுக்களுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கி பாராட்டினார் .
இதில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சேர்ந்த பொறுப்பாளர்கள், பள்ளி பாதுகாப்புக் குழுவினர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் அனைத்து மாவட்ட பயிற்சியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
போட்டிகளிடையே செய்தியாளர்களை சந்தித்த மாணவி கீர்த்தனா, தான் 7 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்று வருவதாகவும், தற்போது தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதால், நடப்பாண்டில் பலர் ஆர்வமாக சிலம்பம் பயில வருவதாகவும், குறிப்பாக மாணவியர்கள், பெண்கள் ஆர்வமாக இக்கலையை கற்க விரும்பி வருகிறார்கள் இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நன்றி என குறிப்பிட்டார்
பேட்டி : 1. மாணவி டி. கீர்த்தனா 2. சுதாகரன், நிறுவனத்தலைவர், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம்

















