கும்பகோணம், டிச. 26 –

கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்  திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்                      வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர் முன்னிலையிலும் நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் காலியாக உள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் என்றார். மேலும், தேவையான இடங்களில் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது கடந்த ஐந்தாண்டுகளில் குற்றச்செயல்கள் எதிலும் ஈடுபடாமல் வழக்குப் பதிவுகள் இல்லாத ரவுடிகள்          200 – க்கும் மேற்பட்ட நபர்களை குற்றப்பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கண்காணிப்பு கேமரா அமைத்த பிறகு பெருமளவு சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்கள் குறைந்து வருவதாகவும், மணல் திருட்டை தடுக்க மேலும் கவனம் செலுத்தப்படும் என்றும், அதைப்போன்று சாலைகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நகராட்சியினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலும் நிலத்தகராறு தொடர்புடையதாக இருக்கிறது என செய்தியாளர்களிடம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்தார். மேலும், இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 53 புகார் மனுக்களும் காவலர்களிடம் 17 புகார் மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீதான நடவடிக்கைகள் பதினைந்து தினங்களில் எடுக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here