கும்பகோணம், ஜன. 12 –
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த போது மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியை ஏற்படுத்திய காங்கிரசை கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சி அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரிவின் பிரச்சார பிரிவு சார்பில் கும்பகோணம் மடத்துத் தெருவிலிருந்து பாலக்கரை வரை மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நகரத்தலைவர் கல்கண்டு ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஷ் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாச்சாரி மாவட்டச் செயலாளர்கள் கருப்பூர் மணி பொன்ராஜ் தேவர் த.லோ.பரமசிவம் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்டத் தலைவர் துரை மூர்த்தி மாவட்ட செயலாளர் பரத் தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் லோகநாதன் அமைப்புசாரா தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் செல்வராஜ் வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் கராத்தே ராஜா நகரச் செயலாளர் சீனிவாசன் நகர பொறுப்பாளர்கள் வேதா முரளி சந்தான கிருஷ்ணன் ஒன்றிய தலைவர்கள் சரவணன் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பஞ்சாப் மாநில முதல்வர் சரண் ஜித் சிங் சன்னி உருவப் படத்தைக் கீழே போட்டு செருப்பால் அடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.





















