கும்பகோணம், ஜன. 17 –
எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கும்பகோணத்தில் தமிழக மக்களால் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். இலங்கை கண்டி அருகில் உள்ள நாவலபிட்டியில் 1917 ஜன.17-ம் தேதி இவர் பிறந்தார்.
தொடக்கத்தில் அவர் காந்தியவாதியாக இருந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தில் தன்னை 1953-ல் இணைத்துக் கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராக தனது அரசியல் வாழ்வை தொடங்கிய எம்ஜிஆர், பின்னாளில் அதிமுக என்ற கட்சியை தொடங்கினார்.
கடந்த 1977-ல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1987-ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார். முதல்வராக இருந்தபோது நல்ல பல திட்டங்களை செயல்படுத்தினார். சத்துணவு திட்டம், 5-ம் உலகத் தமிழ் மாநாடு, பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, காலணி, பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவசவேட்டி – சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. இதனை தொடர்ந்து எம்ஜிஆர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக அரசு போக்குவரத்து கழகம் முன்பு எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கம் செயலாளர் பாஸ்கர் தலைமையில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ஜோசப் தலைவர் நாகேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்




















