கும்பகோணம், பிப். 17 –
கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி, இன்று நண்பகல், பிரசித்தி பெற்ற மகாமக திருக்குளத்தின் நான்கு கரைகளிலும் 12 சைவத்திருக்கோயில்களில் இருந்தும் உற்சவர்கள் ரிஷப வாகனங்களில் அஸ்திரதேவர்களுடன் எழுந்தருள, சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு குளத்தில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவர் சுவாமி ரிஷப வாகனங்களில் எழுந்தருள, அங்கு அஸ்திர தேவருக்கு எண்ணெய் காப்புசாற்றி, திரவிப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜிக்கப்பட்ட பின்னர், அஸ்திர தேவரை சுமந்த படி, சிவாச்சாரியார்கள் மகாமக திருக்குளத்தில் மும்முறை முங்கி எழ, மாசிமக தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
அப்போது ஏராளமானோர் மகாமக குளத்தில் புனித நீராடினர் தொடர்ந்து கரைகளில் எழுந்தருளிய 12 கோயில்களின் உற்சவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது, இதனை ஏராளமானோர் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.