ராமநாதபுரம், செப். 13- ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுயம்பு வேலாயுதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகவிழா வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்த முத்துக்கோனார், அவரது வழிவந்தோர்கள் இலங்கை கதிர்காமத்தில் உள்ள முருகனை நெஞ்சார வணங்கி வந்தனர். இந்நிலையில், முத்துக்கோனார் தாய்நாடு திரும்பும் போது கதிர் காமம் கோயில் பூசாரியிடம் அக் கோயிலிருந்து சிறிது பிடி மண்ணும் சிறிய வெள்ளி வேலும் வாங்கி வந்து, தாம் வாழும் வாணி கிராமத்தில் குலம் தழைக்க தனது வீட்டில் கன்னி மூலையில் நிறுவி வணங்கி வந்தார். பின்னர் அவ்விடத்தில் தமிழக் கடவுளாகிய முருகன் புற்றுவாக தானே தோன்றி அருள் பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுயம்பு வேலாயுத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷகேவிழா திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. பிள்ளையார் வழிபாடு, நிலத்தலைவர் வழிபாடு, மண்ணெடுத்தல் முளையிடுதல், காப்பணிதல், வழிபாடுகள் நடந்தன. முன்னின்ற முதல்வனுக்கு முத்தமிழால் முதல்கால வேள்வி பூஜைகள் நடந்தது. இன்பத்தமிழால் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடந்தன. 3 மற்றும் நான்காம் வேள்வி பூஜைகள் நடந்தது. கோயில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் புனிதநீர் குடத்தை சுமந்து கோயிலை வலம் வந்து கோபுரத்திற்கு சென்றனர். வேதவிற்பன்னர்கள் வேதங்கள் முழங்க வானத்தில் கருடபகவான் வட்டமிட கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷகே நிகழ்ச்சி விமர்சையாக நடந்தது. பின் சுயம்பு வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கவிக்கோ வாணி கருணாநிதி, தலைவர் தாமரைமணாளன், துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் கார்த்தி, ஞானமுருகன் உட்பட பலர் செய்து இருந்தனர்.
தென்மாவட்ட தலைமைச் செய்தியாளர் இ.சிவசங்கரன்