ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்கு செல்லும் யாத்திரிகர்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் வருகி்ற மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற உள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும் கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரின் தலமையின் கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.

மேலும் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து தடையின்மை சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பாலித்தீன் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றையும் படகுகளில் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

கச்சத்தீவு யாத்திரைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காபபீடு குறித்த விபரங்களை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். அவசர சூழ்நிலைக்கு ஏற்றவாறு யாத்திரிகர்கள் புறப்படும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்திரிகர்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும். இதுதவிர யாத்திரைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை, இந்திய கப்பற்படை, சுங்கத்துறை மற்றும் உளவுத்துறை பணியகம் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் டாக்டர் சுமன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் முல்லைக்கொடி, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் உட்பட அரசு அலுவலர்கள், கச்சத்தீவு யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here