கும்பகோணம், நவ. 30 –

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் அசோக் ராஜ் மற்றும் முஹம்மது அனஸ் என்பவர்களை கொலை செய்த வழக்கில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்புகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினரைக் கண்டித்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சோழபுரத்தில் சித்த மருத்துவர் எனக்கூறப்படும் கேசமூர்த்தி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் டிரைவர் அசோக் ராஜா என்பவரை துண்டு துண்டாக வெட்டி அவரது உடலை வீட்டிலேயே புதைத்ததாக கூறப்படும் அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு மாயமான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அனஸ் என்ற இளைஞரை கேசமூர்த்தி தற்போது அசோக் ராஜாவை கொலை செய்தது போல் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது‌ள்ளதாக தகவல் தெரிய வருகிறது.

அதனால் கேசமுர்த்தி பழனி என்பவரின் வீட்டினை முழுமையாக தோண்டி ஆய்வு செய்ய வேண்டும். மேலும் முகமது அனஸ் மற்றும் அசோக்ராஜ் கொலை வழக்கை விரைந்து நடத்திடவும் மற்றும் காணாமல் போன ரெமிஜான் பிவியை கண்டுபிடித்து கொடுக்கவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனே நிவாரண உதவி மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கிட கோரியும் சோழபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் சோழபுரம் ஜமாத் சார்பில் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி கைது செய்ததால் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து அனைத்து இஸ்லாமிய அமைப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் காவல் துறையினரைக் கண்டித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here