இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வந்த இவர் ஆஸ்திரேலியா தொடரின்போது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார் ஷமி.
இதனால் உலகக்கோப்பைக்கான அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்னுடைய இலக்கு என முகமது ஷமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘கடந்த ஒரு ஆண்டாக நான் ஏற்றம் மற்றும் இறக்கத்தை பார்த்துள்ளேன். ஆனால் கிரிக்கெட் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது.
என்னுடைய இலக்கே அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். அனுபவ வீரர்களின் கருத்துக்களை கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் மாற விரும்புகிறேன். அந்தவகையில் என்னுடைய பந்து வீச்சு சென்று கொண்டிருக்கிறது. நான் அதிக அளவில் என்னுடைய லைன் மற்றும் லெந்த் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன்.
காயத்தில் இருந்து மீண்டும் வரும்போது என்னுடைய எடை 93 கிலோவுக்கு மேல் இருந்தது. அதன்பிறகு என்னுடைய எடையை குறைக்க தீர்மானித்தேன். இந்த விஷயத்தில் உதவி செய்த அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எடை விஷயத்தில் எனது உடற்பயிற்சியை அப்படியே தக்க வைத்துள்ளேன்.
ஒரு அணியாக நாங்கள் கடினமாக உழைக்கிறோம். ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதனால் ஒவ்வொருவரும் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறது’’ என்றார்.