தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு …
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே காவல் துறை சார்பில் இரு சக்கர ரோந்து வாகனங்களின் இயக்கத்தை மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து காவல் துறையினர் தெரிவித்தது:
தஞ்சாவூர் மாநகரில் குற்றத் தடுப்புக்காகவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காகவும் 5 இருசக்கர ரோந்து வாகனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை, வல்லம் சாலை, புதுக்கோட்டை முதன்மை சாலை, விளார் சாலை, நாகை முதன்மை சாலை, கீழவாசல், திருவையாறு முதன்மை சாலை போன்ற முக்கிய சாலைகளில் இந்த காவல் இரு சக்கர ரோந்து வாகனங்கள் இயக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு காவல் இரு சக்கர ரோந்து வாகனத்திலும் சைரன் ஒலி, சிவப்பு, நீல நிற ஒளி விளக்குகள், கேமரா, வாக்கி டாக்கி ஆகியவை உள்ளன. ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் இரு காவலர்கள் தனிப்பட்ட உடை அணிந்து ரோந்து பணி செல்வர்.
இந்த ரோந்து வாகனங்களில் பெண் காவலர்கள் அடங்கிய ஒரு ரோந்து வாகனமும் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. இது, தஞ்சாவூரில் காவல் துறையின் சேவைகள் விரைவாக பொதுமக்களைச் சென்று சேருவதற்கான ஒரு முயற்சி என காவல் துறையினர் தெரிவித்தனர்.