காஞ்சிபுரம், ஆக. 15 –
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கியும், இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச ஆட்டோ பயணத்தை பொதுக்களுக்கு வழங்கியும் வருகின்றார்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க போராடிய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், இன்றைய தினத்தில் தனது வருமானம் மற்றும் உழைப்பினை இந்நாட்டு மக்களுக்காக சேவை செய்திட முடிவெடுத்து காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம், அத்திவரதர் வரதராஜபெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், பேருந்து நிலையம் என காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களுக்கும் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்ய ஆட்டோவில் அழைத்து செல்கின்றார். மேலும், ஆறுமுகத்தின் இச்செயலை பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டியும் அவரது சேவையை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர்.