இராசிபுரம், மார்ச். 24 –
தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.
இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்து நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி செய்து அதற்கான சான்று மற்றும் நகைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராசிபுரம் அடுத்த அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன் பெற்றவர்கள் மற்ற இடங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. ஆனால் எங்களுக்கு இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி கூட்டுறவு கடன் சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டுறவு கடன் சங்க செயலாளர் இரண்டு நாட்களில் நகைகள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து பெண்கள் கலைந்துச் சென்றனர்.