கும்பகோணம், ஆக. 18 –

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் சாலை விரிவாக்க பணியில்,  பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சாலையின் நடுவில் இருக்கும் ஒன்றல்ல, எட்டு மின்கம்பங்களை அகற்றாமல் சாலை விரிவாக்க பணிகளை முடித்து சென்ற நெடுஞ்சாலை துறையின் விநோத செயலைக்கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கப்பணியானது, தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பியுமான எஸ் கல்யாணசுந்தரம் வீட்டிற்கும், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும் அருகிலேயே இருப்பது மேலும் அப்பகுதி மக்களிடையையே ஆச்சரியத்தை ஏற்படுத்திவுள்ளது.

மேலும், இதனால் அப்பகுதியில் பெரும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்திலும் அவர்கள் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் துறைச்சார்ந்த அலுவலர்கள் விரைந்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

கும்பகோணம் அருகே கொற்கை, பம்பப்படையூர், தென்னூர், பட்டீஸ்வரம் சாலை உள்ளது. இதில் தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி சமீபத்தில் நடைபெற்றது. இதில் சாலை விரிவாக்க பணிக்கான முறையான எந்தவித நடவடிக்கையும் மேற் கொள்ளாமல் சாலையின் ஓரமாக இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்ததால் தற்போது அந்த மின்கம்பங்கள் சாலையின் நடுவே அமைந்து பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இப்பகுதியில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. எனவே நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் புதிதாக பெற, உரிமம் புதுப்பிக்க, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பதிவு, பொது வாகனங்கள் தகுதி சான்று பெறவும் வாகனங்களுடன் இச்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது, தற்போது இச்சாலை அகலமாக உள்ளது என இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரின் கவனம் சிறிது தவறினாலும், சாலையின் நடுவே மின் விளக்கு இல்லாத மின்கம்பம் மீது மோதி விபத்தில் மாட்டிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதில் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் தான் ஆபத்து அதிகம் காரணம் இப்படி சாலையின் நடுவே ஒன்று இரண்டு அல்ல, எட்டு மின் கம்பங்கள் அமைந்துள்ளது அந்த மின்கம்பங்களில் மின் விளக்குகள் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சி, சமீபகாலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, இருசக்கர வாகனத்தை வைத்திருக்கும் போதே, அதனை நடுவில் வைத்து புதிதாக சாலைகள் போடுவது, அடிபம்பை அகற்றி மாற்று இடத்தில் அமைக்காமலேயே, அதனை மையமாக வைத்து சாலை போடுவது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இந்நிகழ்வு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையின் அலட்சியம் மற்றும் மெத்தனப்போக்கை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here