தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தனக்கு பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் இறந்த பிறகும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தலைமகனாக இருந்து தனது தமிழ் ஆசிரியரின் குடும்பத்தை கவனித்து வருவது நெகிழ வைத்திருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். சமூகம் சார்ந்த செயல்களில் அக்கறை காட்டுவதுடன், பொது நலன் தொடர்பான தன் கருத்துக்களை தொலைக்காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் மீது பெரும் பற்றுக் கொண்ட பாலச்சந்திரன் இலக்கியங்களில் புலமை பெற்றவராகவும் திகழ்கிறார். பாலச்சந்திரன் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு தமிழ் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் ராமசாமி. இவர் இறந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கல்வி கண் திறந்த நன்றி கடனுக்காக ஆசிரியருடைய குடும்பத்தில் மூத்த பிள்ளையாக இருந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி தருகிறார்.
பாலச்சந்திரன் தஞ்சாவூர் வரும் போதெல்லாம் 80 வயதாகும் ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கி செல்வது வழக்கமாகும்.
திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் பேரன் சரவணன் குடும்பத்துடன் பட்டு வசித்து வருகிறார். தற்போது தஞ்சாவூர் வந்த பாலச்சந்திரன் நேமத்திற்கு சென்று பட்டுவை சந்தித்துள்ளார்.
அப்போது பட்டு வயது முதுமையால் அவதிப்பட்டு வருவதையும், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதையும் அறிந்துள்ளார். அத்துடன் பட்டுவின் பேரன் சரவணனிடம் ரூ.45,000 கொடுத்து கறவை பசு மாடு வாங்கி அதில் வரும் வருமானத்தில் பாட்டியை குறையில்லாமல் கவனித்து கொள் என அன்பு காட்டியுள்ளார்.
என் வயிற்றில் பிறக்கலைன்னாலும் தலைப்புள்ளயா இருந்து என்னை தாங்குறீயே தங்கம் என்று மனமும் கண்ணும் கலங்கி நெகிழ்ந்திருக்கிறார். ஆசிரியரால்தான் நான் ஆளானேன் உங்களை காக்க வேண்டியது என் கடமை என்ற பாலச்சந்திரனின் கையை பற்றி பட்டு முகம் புதைக்க அனைவரது முகமும் ஆனந்த கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.
60 வருடங்களுக்கு முன்பு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததுடன், ஆசிரியர் மறைவிற்கு பிறகும் அவரது குடும்பத்தை கவனித்து வரும் செய்தி வெளியானதில் அப்பகுதியினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து மறைந்த தமிழாசிரியர் மனைவி பட்டு அம்மாவிடம் பேசினோம், திண்டுக்கல் சென்ட் மேரீஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் என் கணவர் ராமசாமி 37 வருடங்கள் தமிழ் ஆசிரியராக பணி புரிந்தார். அங்கு படித்த பாலச்சந்திரனுக்கு 7 மற்றும் 8ம் வகுப்பில் தமிழ் ஆசிரியராக என் கணவர் பாடம் சொல்லி கொடுத்துள்ளார்.
தமிழ் மீது பாலச்சந்திரன் வைத்திருந்த ஆர்வம் இருவரையும் நெருக்கமாக்கியுள்ளது. அதே போல் நடிப்பு மீதும் பாலச்சந்திரனுக்கு ஈடுபாடு இருந்துள்ளது. இதையறிந்தவர் படிப்பு மட்டுமின்றி பள்ளி விழாக்களில் நாடகம் இயற்றி பாலச்சந்திரனை நடிக்க வைத்துள்ளார்.
தமிழ் வசன உச்சரிப்புகளை பாலச்சந்திரன் அழகாக பேசியதில் வியந்து போன என் கணவர் கம்பராகவும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சின்ன வயசில் பாலா, தமிழ் மீது வைத்திருக்கும் பற்றை வீட்டிற்கு வந்த பிறகும் சிலாகித்து பேசுவார்.
இதை தொடர்ந்து உயர் படிப்பு முடிந்து பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரி ஆகிவிட்டார். என் கணவரும் ஓய்வு பெற நாங்கள் நேமத்துக்கு வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்களுக்கு ஐந்து பெண் பிள்ளைகள். எனக்கு பிறகு உன்னை யார் கவனித்து கொள்வார்கள் என்று என் கணவர் அடிக்கடி கவலைப்படுவார்.
இந்தநிலையில் மிதுனாபூரில் கலெக்டராக இருந்த பாலச்சந்திரன் நாங்கள் இருக்கும் இடத்தை அறிந்து வீட்டுக்கே வந்து விட்டார். என் கணவருக்கு சந்தோஷம் தாங்கல. எங்களை கொல்கத்தாவுக்கு அழைத்து சென்றதுடன் இரண்டு நகரங்களில் தமிழ் சங்கம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஆசியரை கலந்து கொள்ள வைத்து சிறப்புரையாற்ற வைத்து அழகுப் பார்த்தார்.
அதன் பின்னர் வருடத்திற்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவார். நாங்கள் கேட்காமலேயே எங்கள் தேவைகளை அறிந்து செய்து கொடுப்பார். எங்களுடைய ஐந்து பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டோம்.
இந்நிலையில் 2017ல் என் கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு பாலச்சந்திரன் வரமாட்டார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதை பொய்யாக்கி நான் உங்களுடைய மூத்த பிள்ளையம்மா என்று வந்து நின்றவர் இன்று வரை எங்களை விடவில்லை. தற்போது நான் பேரனுடன் வசிக்கிறேன். பேரன் சிரமப்படுவதை அறிந்த அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு கறவை பசு மாடு ஒன்று வாங்கி கொடுத்தார். எப்ப வந்தாலும் கையில் பணத்தை திணித்து விட்டு செல்வார். தற்போது வந்த பாலச்சந்திரன் ஒவ்வொரும் மாதமும் மருந்து, மாத்திரை வாங்க முடியாமல் நான் அள்ளாடுவதை அறிந்து கறவை பசு மாடு வாங்குவதற்கு ரூ.45,000 கொடுத்துள்ளார்.
வீட்டில் மேற்கூரையின் ஓடுகள் உடைந்து ஓட்டையாக இருப்பதை ஏதேச்சையாக கவனித்தவர் வீட்டை சீரமைத்து தருவதாக சொன்னார். என் வயிற்றில் பிறக்காத மூத்த பிள்ளையான அவர் எங்களுக்கு பால் வார்த்து வருகிறார். அவருடைய இந்த செயல் ஆசிரியர் மீது வைத்திருக்கும் அன்பை உணர்த்துகிறது என்றார்.